வராக அவதாரங்கொண்ட பெருமாள் மகாலக்ஷ்மியுடன் சிலகாலம் இங்கு தங்கியிருந்ததாகவும், தமது மிகப்பெரிய வராக உருவத்தை குறுகிய உருவமாகக் குறைத்து இருந்த காரணத்தால் 'குறுங்குடி நம்பி' என்றும், இந்த ஸ்தலம் 'குறுங்குடி' என்றும் பெயர் பெற்றதாகவும் கூறுவர். அதனால் இந்த ஸ்தலம் 'வாமன க்ஷேத்ரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
நம்பாடுவான் என்னும் பாணன், விரதமிருந்து கைசிக துவாதசியன்று எம்பெருமானை தரிசிக்கச் சென்றான். அப்போது ஒரு அரக்கன், அவனைப் பிடித்து உண்ண முற்படும்போது, 'எம்பெருமானை வழிபட்டுவிட்டு திரும்ப வந்து உணக்கு உணவாகிறேன்' என்று சத்தியம் செய்துக் கொடுத்து இறைவனை வணங்கச் சென்றான். தரிசனம் முடிந்து திரும்பியபோது, பெருமாளின் கடாட்சத்தால் அரக்கனின் பசி நீங்கியது. அவன் நம்பாடுவானிடம், 'உன்னுடைய விரதத்தின் பலனில் ஒரு பாதியை எனக்கு கொடுத்தால் எனது ராட்ஸச உருவம் நீங்கி நான் சாப விமோசனம் பெறுவேன்' என்று கூறினான். நம்பாடுவானும் அவ்வாறே செய்ய, அரக்கனின் சாபம் நீங்கியது என்று வராஹ புராணம் கூறுகிறது. நம்பாடுவான் வெளியே நின்று சேவிப்பதற்காகவே கொடிமரம் சற்று விலகியிருப்பதாக வரலாறு.
மூலவர் நின்ற நம்பி என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் அழகிய நம்பி. தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்று வணங்கப்படுகின்றார். இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள் உண்டு. நாச்சியார்களின் உத்ஸவர்கள் பெருமாளுடன் ஏகாஸனத்தில் இருப்பதால் தாயார் சந்நிதிகளில் அர்ச்சனை கிடையாது. சிவபெருமானுக்கு பெருமாள் பிரத்யக்ஷம்.
நின்ற நம்பி, கிடந்த நம்பி சந்நிதிகளுக்கு இடையில் சிவன் சந்நிதியும் (மகேந்திரகிரி நாதர்), பைரவர் சந்நிதியும் உள்ளன. திருமங்கையாழ்வார் பரமபதித்த ஸ்தலம். இக்கோயில் திருக்குறுங்குடி ஜீயர் மேற்பார்வையில் உள்ளது.
திருமங்கையாழ்வார் 25 பாசுரங்களும், நம்மாழ்வார் 13 பாசுரங்களும், திருமழிசையாழ்வார் 1 பாசுரமும், பெரியாழ்வார் 1 பாசுரமும் ஆக 40 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|